-
ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?
பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல் தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.
அவனை கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.

சோழன் சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப் போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.
சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.
சோழர்கள் இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.
அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.
ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின் கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து உழைத்திருக்கிறார்கள்.
Last edited by RenuCK; 01-21-2010 at 10:50 AM.
Posting Permissions
- You may not post new threads
- You may not post replies
- You may not post attachments
- You may not edit your posts
-
Forum Rules
Bookmarks