Results 1 to 2 of 2

Thread: ஆயிரத்தில் ஒருவன்

  1. #1
    Join Date
    Nov 2008
    Posts
    16,089

    Default ஆயிரத்தில் ஒருவன்

    ஆயிரக்கணக்கானவர்களின் 3 ஆண்டு உழைப்பில் 32 கோடி ரூபாய் செலவில் செல்வராகவன் உருவாகியிருக்கும் படம். ஆதிவாசிகள், நீண்ட பாலைவனப் பயணம், சோழர் பரம்பரை, போர் என்று இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத விஷயங்கள். ஓபனிங் எல்லாம் சரிதான், ஆனால் ஃபினிஷிங்...?

    பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடக்கும் போரில் சோழன் தோற்கடிக்கப்படுகிறான். பாண்டியர்களுக்கு தேவை சோழர்களிடம் இருக்கும் பாண்டியர்களின் குலதெய்வ சிலை. சோழனோ அந்த சிலையை தனது மகனிடம் கொடுத்து சில வீரர்களுடன் பாண்டியர்கள் கையில் சிக்காமல் தப்ப வைக்கிறான். வியட்நாம் நாட்டிற்கு அருகில் இருக்கும் பெயர் தெரியாத தீவுக்கு தப்பிச் செல்கிறான் சோழ இளவரசன்.

    அவனை கண்டுபிடித்து தங்களது குலதெய்வ சிலையை மீட்டுவர பாண்டியர்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. சோழ இளவரசன் இருக்கும் இடமே அவர்களுக்கு தெரியவில்லை. அவன் இருப்பதாக சொல்லும் இடத்துக்கு சென்றவர்கள் உயிருடன் திரும்பியதில்லை. இந்த தேடுதல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இந்த செய்திகள் அனைத்தும் புகைப்படங்களாக படத்தின் தொடக்கத்தில் சில நிமிடங்களில் சொல்லப்பட்டு விடுகிறது. படம் நிகழ்காலத்தில் தொடங்குகிறது.




    சோழன் சென்றதாக நம்பப்படும் இடத்திற்கு செல்லும் ஆராய்ச்சியாளர் (பிரதாப் போத்தன்) காணாமல் போகிறார். அவரை கண்டு பிடிக்கும் பொறுப்பை அரசு ரீமா சென் தலைமையிலான டீமுக்கு அளிக்கிறது. அந்த டீமுடன் பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவும் இணைந்து கொள்கிறார். வியட்நாம் செல்லும் இவர்களுக்கு சுமை தூக்கும் போர்டர் குழுவின் தலைவராக வந்து சேர்கிறார் கார்த்தி.

    சோழர்கள் தப்பிச் சென்றதாக நம்பப்படும் இடத்தை அடைய ஆண்ட்ரியாவிடம் ஒரு ஓலைச் சுவடி இருக்கிறது. கடல், ஆதிவாசிகள், பாம்பு, பசி தாகம், புதை மணல், கிராமம் என ஏழு ஆபத்துகளை அவர்கள் கடந்தாக வேண்டும். ஆபத்துகளை சாகசத்துடன் கடந்து சென்றால் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.

    சோழர்கள் இன்றும் அங்கு தங்கள் பூர்வ நிலத்திலிருந்து அழைப்பு வரும் என காத்திருக்கிறார்கள். அவர்களது அரசர் பார்த்திபன். இதில் “நான்தான் தூதுவன்” என்கிறார் ரீமா சென். அரசர் நம்புகிறார். கிளம்பும் போதுதான் தெரிகிறது அவர் பாண்டிய குலத்தின் வாரிசு என்பதும், பாண்டியர்களின் குலதெய்வ சிலையை எடுத்துப் போக வந்தவர் என்பதும்.

    அப்படியானால் உண்மையான தூதுவன் யார்? சோழர்கள் தங்களது ஆசைப்படி பூர்வீக நிலத்தைச் சென்றடைந்தார்களா? நெடிய போருடன் பதிலளிக்கிறார் செல்வராகவன்.

    ஒளிப்பதிவு, ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் மேனரிஸம், அரசர் பார்த்திபன், பின்னணி இசை, இரம் அலியின் காஸ்ட்யூம், சந்தானத்தின் கலை இயக்கம் அனைத்தும் ஆச்சரியமான அசத்தல்கள். கண்டிப்பாக பாராட்ட வேண்டியவர்கள் படத்தில் நடித்திருக்கும் துணை நடிகர்கள். நிறத்தை கொடுத்து உழைத்திருக்கிறார்கள்.
    Last edited by RenuCK; 01-21-2010 at 10:50 AM.

  2. #2
    Join Date
    Nov 2008
    Posts
    16,089

    Default

    காருக்குள் இருந்து டாப்லெஸ்ஸாக வெளிவரும் அறிமுக காட்சியிலேயே அசத்துகிறார் கார்த்தி. ஆண்ட்ரியா, ரீமா இருவருக்கும் ரூட் விடும் ஏரியாக்கள் கலகல. ஒரு துண்டு கறியை ஆண்ட்ரியாவிடம் கொடுத்துவிட்டு எடுத்துக்கோ என்பது போல் தலையசைக்கிறாரே, அசத்தல். ஆனாலும்... கறிவேப்பிலை மாதிரிதான் வருகிறார் கடைசிவரை.

    நிஜ ஹீரோ ரீமா சென்தான். கவர்ச்சியுடன் துவேசத்தையும் கலந்து அவர் காட்டுகிற ஆவேசம் இதற்குமுன் பார்த்திராதது. ரீமாவின் நிஜ உருவம் தெரிந்ததும் கண்ணில் நீர் ததும்ப நடக்கும் பார்த்திபன் கவர்கிறார். அவர் பாடும் நெல்லாடிய நிலமெங்கே உணர்வை அறுக்கும் பேரிசை.

    நிழல் சிவதாண்டவமாக விரிவதும், அந்த நிழலில் புதை மணிலில் இருந்து தப்பிக்க ஓடுவதும் ரசிக்க வைக்கும் பிரமாண்டம். அதேபோல் பார்த்திபனின் அறிமுக காட்சி.




    வகிடெடுத்தது போன்ற கதையை திரைக்கதை கத்தியால் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் செல்வராகவன். அதுவும் இரண்டாம் பகுதி காட்சிகளில் குழப்பமோ குழப்பம். நிகழ்காலத்தில் நடக்கும் கதைக்கு மாயாஜாலம் எல்லாம் தேவையா? சோழர்கால தமிழ் காதுக்கு இனிமை. பாதி புரியவில்லை என்பதுதான் சோகம்.

    ஏதோ ஒரு நாட்டில் இந்திய ராணுவம் சர்வ சாதாரணமாக வருவதும், தண்ணியடித்து பெண்களை மானபங்கப்படுத்துவதும் டூ மச். அதேபோல் சிவப்பு நிற ஆதிவாசிகளை ஒட்டு மொத்தமாக போட்டுத் தள்ளுகிறார்கள். எப்படிப்பா?

    சாகச காட்சிகள் கிங் சாலமன்ஸ் மைன்ஸ், மெக்கனஸ் கோல்டு, கிளாடியேட்டர், 300 மம்மி, க்ரோஞ்சிங் டைகர்... என பல படங்களை நினைவுப்படுத்துகிறது. பெரிய கற்களை பொறித்து அதை எதிரிகள் மீது வீசுவது, அடிமைகளையும் கைதிகளையும் வீரர்களுடன் மோத விடுவது என சோழர்களுக்கு சம்பந்தமில்லாத ரோம பேரரசின் போர் கலைகளை படத்தில் காட்டுகிறார்கள். தொ.பரமசிவம் போன்றவர்களிடம் ஆலோசித்திருக்கலாம்.

    ராணுவ அதிகாரி அழகம்பெருமாள் உட்பட பலரும் பாண்டிய குல வாரிசு என்பதும், சிலையை மீட்க ராணுவத்தில் சேர்ந்ததாக ஜல்லியடிப்பதும் இன்ஸ்டன்ட் பூ.

    ராணுவம் சோழர்களை கொன்று அவர்களது பெண்களை மானப்பங்கப்படுத்தும் போது ஈழம் மனக்கண்ணில் விரிவதை தவிர்க்க முடியவில்லை. காயம்பட்ட பார்த்திபன் கடற்கரைக்கு ஊர்ந்து சென்று உதவி வேண்டி பூர்வீக சோழர்களை அழைப்பதும், உதவி செய்ய கப்பல்கள் அணிவகுத்து வருவது போல் கனவு காண்பதும் ஈழ சித்திரத்தை முழுமையாக்குகிறது.

    செல்வராகவனின் முயற்சியும் பிரமாண்ட உழைப்பும், கை நழுவிப்போன திரைக்கதையால் கலகலத்துப் போனது, துரதிர்ஷ்டமின்றி வேறென்ன.
    Last edited by RenuCK; 01-21-2010 at 10:50 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •